இந்தியா

பிஹாரில் கடந்த முறையைவிட பெண் எம்எல்ஏக்கள் அதிகம்

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ஏற்கெனவே எம்எல்ஏ-வாக இருந்த 111 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் வெற்றி பெற்றவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் இடம்பெற்றுள்ள தகவலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களைவிட இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சற்று வயதானவர்கள் ஆவர். கடந்த முறை வென்ற எம்எல்ஏ-க்களின் சராசரி வயது 52 ஆக இருந்த நிலையில் இந்த முறை 53 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல கடந்த முறை வென்றவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.4.32 கோடியாக இருந்தது. இது இந்த முறை இரு மடங்காகி ரூ.9.02 கோடியாகி உள்ளது.

பழைய எம்எல்ஏ-க்களில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எண்ணிக்கை 163 ஆக இருந்த நிலையில் இது இந்த முறை 130 ஆகக் குறைந்துள்ளது. இதுபோல பட்டதாரிகளின் எண்ணிக்கை 149-லிருந்து 147 ஆக குறைந்துள்ளது.

இந்த தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீண்டும் வெற்றி பெற பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஆனாலும், கடந்த முறையைவிட பெண் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 3 மட்டுமே (26-லிருந்து 29 ஆக) அதிகரித்துள்ளது. இதில் 26 பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள்.

SCROLL FOR NEXT