புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பிஹாரில் 7.42 கோடி வாக்காளர்கள் இருப்பதாக கடந்த அக்டோபர் 6-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.45 கோடி என்று ஆணையம் கூறியது.
இதுகுறித்து முகநூலில் காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்திருந்தது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு வரை தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர உரிமை உள்ளது.
அதன்படி, கடந்த அக்டோபர் 1ம் தேதி வரையில் தகுதியான வாக்காளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டது. அதன்படி 3 லட்சம் வாக்காளர்களின் பெயர் கூடுதலாக பட்டியலில் இடம்பெற்றது. அந்த எண்ணிக்கையைதான் பிஹார் தேர்தல் முடிந்த பின்னர் வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.