பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து விலகுவதாக லாலுவின் மகள் ரோகிணி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ரப்ரி தம்பதியருக்கு 7 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப், மிசா பாரதி, ரோகிணி ஆகியோர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) அடுத்த தலைவராக முன்னிறுத்தப்படுகிறார். இதற்கு லாலுவின் இதர வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேஜஸ்வி யாதவின் வலது கரமாக சஞ்சய் யாதவ், ரமீஸ் ஆகியோர் செயல்படுகின்றனர். ஆரம்ப காலத்தில் தேஜஸ்வி யாதவ் கிரிக்கெட் வீரராக இருந்தார். அவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரராக இருந்தபோது ஹரியானாவை சேர்ந்த சஞ்சய் யாதவ் அறிமுகமாகி நண்பரானார். உத்தர பிரதேசத்தின் பிரபல அரசியல் குடும்பத்தை சேர்ந்த ரமீஸும், மிக நீண்ட காலமாக தேஜஸ்வியின் நண்பராக உள்ளார்.
பிஹார் தேர்தலின்போது தேஜஸ்வி தனது ஆதரவாளர்களை மட்டுமே ஆர்ஜேடி வேட்பாளர்களாக நிறுத்த முயற்சி செய்தார். இதற்கு தேஜ் பிரதாப், ரோகிணி, மிசா பாரதி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் தனது மகன்கள், மகள்களுக்கு இடையே சமரசம் செய்தார்.
இந்த சூழலில் தேஜ் பிரதாப், தனது காதலி அனுஷ்கா யாதவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதை காரணம் காட்டி ஆர்ஜேடி-யில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கப்பட்டார். இதற்கு தேஜஸ்வியின் நண்பர்கள் சஞ்சய், ரமீஸ் காரணம் என்று தேஜ் பிரதாப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
சிறுநீரக தானம்: சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட லாலு பிரசாத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டில் ரோகிணி தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். அப்போது முதல் ஆர்ஜேடி கட்சியில் ரோகிணியின் செல்வாக்கு உயர்ந்தது. தனது ஆதரவாளர்களுக்கும் சீட் ஒதுக்க அவர் வலியுறுத்தினார். இதற்கு தேஜஸ்வி மறுப்பு தெரிவித்தார். இறுதியில் தந்தை லாலுவின் தலையீட்டால் தனது ஆதரவாளர்களையும் அவர் வேட்பாளர்களாக நிறுத்தினார். நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியானபோது ஆர்ஜேடி படுதோல்வியை தழுவியது. இதன்காரணமாக தேஜஸ்வி ஆதரவாளர்கள் ரோகிணி மீது விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த சூழலில் சமூக வலைதளத்தில் ரோகிணி நேற்று வெளியிட்ட பதிவில், “நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். எனது குடும்பத்தில் இருந்தும் விலகிச் செல்கிறேன். சஞ்சய் யாதவும் ரமீஸும் இதைத்தான் விரும்புகின்றனர். எல்லா பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். ரோகிணியின் சமூக வலைதள பதிவால் லாலு பிரசாத் குடும்பத்தில் கோஷ்டி மோதல் உச்சத்தை எட்டியிருப்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.