விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கடந்த 2 நாட்களாக இந்திய தொழில் கூட்டாண்மை மாநாடு நடைபெற்றது. இதனை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் இந்தியா மற்றும் 72 நாடுகளின் தொழிலதிபர்கள், தலைமை நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.நிறைவு நாளான நேற்று முதல்வர் சந்திரபாபு பேசியதாவது: தொழில் கூட்டாண்மை மாநாட்டில் சுமார் ரூ.13 லட்சம் கோடி வரை ஆந்திராவில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் முன் வந்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்த கடந்த 18 மாதங்களில் மட்டும் ரூ.22 லட்சம் கோடி முதலீடு பெற்றுள்ளது.
தடா அருகே உள்ள ஸ்ரீ சிட்டியில் மேலும் 12 புதிய தொழிற்சாலைகள் அமைய உள்ளன. இதன் மூலம் 12,365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.விரைவில் ஸ்ரீ சிட்டியில் கூடுதலாக 6 ஆயிரம் ஏக்கர் நிலம் இணைக்கப்படும். 50 நாடுகளின் நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க உள்ளன. கூடிய விரைவில் இங்கு 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.இவ்வாறு அவர் பேசினார்.