பாட்னா: பிஹாரில் தனித்துப் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் சேர விரும்பியது. ஆனால் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு இதில் விருப்பம் இல்லாததால் கூட்டணி ஏற்படவில்லை.
இண்டியா கூட்டணி தலைவர்கள் மூலம் தேர்தல் கூட்டணியில் இணைய பலமுறை ஒவைசி முயற்சித்தார். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஒவைசி பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் சீமாஞ்சல் பகுதியில் 14 இடங்களில் தனித்துப் போட்டியிட்டார். இந்நிலை
யில் இவரது கட்சி அமவுர், பகதூர்கஞ்ச், கோச்சதமன், ஜோகிஹட், பைசி ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பிஹாரில் முதல்முறையாக கடந்த 2015 சட்டப்பேரவை தேர்தலில் ஒவைசி கட்சி போட்டியிட்டது. அப்போது கிஷான்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2020 சட்டப்பேரவை தேர்தலில் இவரது கட்சி 5 இடங்களில் வென்று எதிர்ப்பாளர்களை
ஆச்சரியப்படுத்தியது.
ஆர்ஜேடிக்கு தாவல்: எனினும் அவரது கட்சியின் 4 எம்எல்ஏக்கள் 2022-ல் ஆர்ஜேடிக்கு தாவினர். அப்போது ஏஐஎம்ஐஎம் கட்சியின் பிஹார் தலைவர் அக்தருல் இமான், “எங்கள் எம்எல்ஏக்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எங்கள் ஆதரவாளர்களை எடுத்துக்கொள்ள முடியாது" என்றார். அதுபோலவே 2025 தேர்தலில் 5 இடங்களில் ஏஐஎம்ஐஎம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.