புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்புக்கு பிறகு அல் பலா பல்கலைக்கழக. மருத்துவர்களிடம் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு மற்றும் பெருமளவு வெடிபொருள் பறிமுதல் சம்பவங்களை தொடர்ந்து ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகம் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
இங்கு கடந்த சில நாட்களாக போலீஸார் அடிக்கடி சென்று இங்குள்ள 52 மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர். டெல்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்கள் பற்றிய தகவல்களை திரட்டி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுடன் தொழில்முறை தொடர்புகளை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தவறான செய்திகள் மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
ஹரியானா - டெல்லி எல்லையிலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் பரிதாபாத், தவுஜ் பகுதியில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 70 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்துள்ளது. 2014-ல் நிறுவப்பட்டு, அடுத்த ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அல் பலா அறக்கட்டளையின் கீழ் 1997-ல் முதன் முதலில் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. பிறகு இது மருத்துவம், கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுடன் பல்கலைக்கழகமாக மாறியது. அல் பலா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் 2019 முதல் எம்பிபிஎஸ் பட்டங்களை வழங்கி வருகிறது. இது 650 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இங்கு எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுதோறும் 200 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்தப் படிப்புக்கு முதல் 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.16.37 லட்சமும், இறுதி ஆண்டுக்கு ரூ.9 லட்சமும் பல்கலைக்கழகம் வசூலிக்கிறது. இந்த ரூ.74.50 லட்சம் தவிர விடுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.3 லட்சம் வசூலிக்கப்படுகிறது.