புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறியதாவது: பொதுவாக அம்மோனியம் நைட்ரேட் வேளாண் உரமாக பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் மானிய உதவியுடன் சந்தையில் ஒரு கிலோ அம்மோனியம் நைட்ரேட் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெயின்ட், ஜெல் ஆகியவற்றின் தயாரிப்பிலும் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது. உரம், ஆலை பயன்பாடு காரணமாக இது சந்தையில் தாராளமாக கிடைக்கிறது. சுமார் 94% அம்மோனியம் நைட்ரேட் உடன் 6 சதவீத எரிபொருளை கலந்தால் அது சக்திவாய்ந்த வெடிபொருளாக மாறுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுரங்கங்களில் பாறைகள் தகர்க்கப்படுகின்றன.
டெல்லி கார் குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இது வெடிக்கும்போது காற்றில் கலந்து ஆரஞ்சு நிற புகை உருவாகும். டெல்லி குண்டுவெடிப்பில் ஆரஞ்சு நிற புகை எழுந்திருக்கிறது. மேலும் தடயவியல் சோதனையிலும் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 1985-ம் ஆண்டில் டெல்லியில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இந்த குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது. இதேபோல 2010-ம் ஆண்டு புனே குண்டுவெடிப்பு, 2007-ல் ஹைதராபாத் குண்டுவெடிப்பிலும் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது. சர்வதேச அளவில் கடந்த 1995-ம் ஆண்டு அமெரிக்காவின் ஒக்லாமா நகரில் 1,800 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 168 பேர் உயிரிழந்தனர். கடந்த 2020-ல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 3,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 200 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி தாக்குதலில் சுமார் 100 கிலோ அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கணக்கிட்டு உள்ளோம். இவ்வாறு டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.