பிஹாரில் 122 தொகுதிகளில் நேற்று இரண்டாம் மற்றும்இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜெகனாபாத் நகரில் வாக்களிப்பதற்காக, அங்குள்ள வாக்குச் சாவடியில் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.படம்: பிடிஐ 
இந்தியா

பிஹார் இறுதிகட்டத் தேர்தலில் 68.52 % வாக்குப்பதிவு: கருத்துக் கணிப்பில் என்டிஏ-க்கு வெற்றி வாய்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹாரில் நேற்று நடைபெற்ற 2-வது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் 68.52 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நேற்று மாலை முடிவடைந்ததை முன்னிட்டு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாயின. இதில் தே.ஜ கூட்டணி 130 முதல் 160 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பிஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3.75 கோடி. முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் மீதம் உள்ள 122 தொகுதிகளில் நேற்று இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3.75 கோடி. நேற்று நடைபெற்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக 68.52 சதவீத வாக்குகள் பதிவாகின.

பிஹாரில் சட்டப் பேரவை தேர்தல் நேற்று மாலையுடன் முடிவடைந்ததால், கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இதில் தே.ஜ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: என்டிடிவி கருத்துக் கணிப்பில் தே.ஜ கூட்டணி 152 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மெகா கூட்டணி 84 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைனிக் பாஸ்கர் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தே.ஜ கூட்டணி 145 முதல் 160 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மெகா கூட்டணி 73 முதல் 91 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தே.ஜ கூட்டணி 145 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மெகா கூட்டணி 95 இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாணக்யா வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தே.ஜ. கூட்டணி 135 முதல் 138 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மெகா கூட்டணி 100 முதல் 108 இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு 0-5 இடங்கள் கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் அதிகபட்சமாக 8 இடங்கள் வரை வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT