புதுடெல்லி: ரயிலில் குளித்த பயணி ஒருவரை ரயில்வே துறை அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு ரயிலில் பயணி ஒருவர் கழிப்பறைக்கு அருகில் நின்று வாளி மற்றும் குவளையுடன் சோப் போட்டு குளிப்பது போன்ற வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பலர் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்தனர்.
மேலும் பலர் அந்தப் பயணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் வீடியோவில் காணப்பட்ட அந்த நபரை அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த சம்பவம் உ.பி.யின் ஜான்சி ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலம் அடைவதற்காக ரயிலில் குளிப்பது போல் ரீல்ஸ் எடுத்ததாக அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில் இதுபோன்ற தவறான மற்றும் பயணிகளுக்கு சிரமம் தரும் எந்தவொரு செயலிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்று வட மத்திய ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.