புதுடெல்லி: டெல்லி - செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் கார் தீப்பிடித்து வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 24 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து டெல்லி காவல் துறையின் ஆணையர் சதீஷ் கோல்சா விளக்கம் அளித்துள்ளார்.
“இன்று மாலை 6.52 மணி அளவில் நிதானமாக நகர்ந்து கொண்டிருந்த கார் ஒன்று சிவப்பு விளக்கு ஒளிர்ந்ததை அடுத்து நின்றது. அந்த வாகனம் வெடித்தது. அதனால் அதற்கு அருகில் இருந்த மற்ற வாகனங்களும் சேதமடைந்தன. தடயவியல் நிபுணர்கள், தேசிய புலனாய்வு முகமையினர் உட்பட பல்வேறு விசாரணை அமைப்புகள் துறைகளை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழப்பும், காயங்களும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம். உள்துறை அமைச்சர் அம்த் ஷா, எங்களை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டறிந்தார். அவருக்கு தொடர்ந்து இது குறித்த தகவலை அளித்து வருகிறோம்” என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டெல்லியில் மக்கள் நெரிசல் அதிகம் நிறைந்த பகுதியில் இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது தேசத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. டெல்லியில் உள்ள விமான நிலையம், ரயில் நிலையம் என பல்வேறு இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.