புதுடெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்தது. அதையடுத்து அந்த பகுதியில் அந்த காரை ஒட்டியிருந்த இருசக்கர வாகனங்கள் உட்பட சுமார் 7-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீ பற்றியது. இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அதில் 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே உயிரிழந்தனர். 3 பேர் தீவிரமாக காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து கிடைத்துள்ள வீடியோ காட்சிகளில் வாகனங்கள் தீப்பற்றி உருக்குலைந்து உள்ளன. இந்தக் காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. அந்தப் பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன? - ‘நடந்த சம்பவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒருவரின் கை துண்டாகி சாலையில் இருந்தது. என்னால் இதற்கு மேல் பேச முடியவில்லை’, ‘இங்கு என்ன நடந்தது என்றே எங்களுக்கு புரியவில்லை. அங்கும் இங்குமாக மனித உடல்களின் பாகங்கள் சிதறி கிடந்தன. வாகனங்கள் தீப் பிடித்து இருந்தன’, ‘இந்த அளவுக்கு எனது வாழ்வில் நான் கேட்டது கிடையாது. அந்த சப்தம் அப்படி இருந்தது. மொத்தம் மூன்று முறை அதை நான் உணர்ந்தேன். நாங்கள் எல்லோரும் உயிரிழந்து விடுவோம் என நினைத்தோம்’, ‘எங்கள் வீடு அருகில் தான் உள்ளது. மாடியில் இருந்து பார்த்த போது சாலையில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்தேன்’ என சம்பவத்தை நேரில் கண்ட டெல்லிவாசிகள் தெரிவித்துள்ளனர்.