பாட்னா: "பிஹார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள்" என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “இன்று தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள். சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது. பிஹார் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதியும் அவர்கள் அதையே செய்வார்கள். பிரதமராக இருந்தாலும் சரி, வேறு எந்த அமைச்சராக இருந்தாலும் சரி, எங்கள் அரசாங்கம் 17 மாதங்களாக வழங்கிய இடஒதுக்கீட்டைப் பற்றி யாரும் பேசவில்லை. மக்களின் 65% இடஒதுக்கீட்டை பிரதமர் தின்றுவிட்டார். அவர்கள் பிஹாருக்கு என்ன கொடுத்தார்கள், குஜராத்துக்கு என்ன கொடுத்தார்கள் என்பது பற்றி பேச வேண்டும்” என்று கூறினார்.
இதற்கிடையில், ராஷ்ட்ரிய ஜனதா தள ஆதரவாளர்கள் தேஜஸ்வி யாதவின் பிறந்தநாளை முன்னிட்டு பாட்னாவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ‘பிஹார் முதல்வர் தேஜஸ்வி யாதவ்’ என்ற சுவரொட்டிகளும் அவரது வீட்டிற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்தன.
சமஸ்திபூர் மாவட்டத்தின் சரைரஞ்சன் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கே.எஸ்.ஆர் கல்லூரி அருகே சிதறிக்கிடந்த விவிபாட் சீட்டுகள் தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டியது. அக்கட்சியின் எக்ஸ் பதிவில், "சமஸ்திபூரின் சரைரஞ்சன் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கேஎஸ்ஆர் கல்லூரி அருகே சாலையில் ஏராளமான விவிபாட் சீட்டுகள் சிதறிக் கிடந்தன. எப்போது, எப்படி, ஏன், யாருடைய உத்தரவின் பேரில் இந்த சீட்டுகள் தூக்கி எறியப்பட்டன? திருடர்கள் ஆணையம் இதற்கு பதிலளிக்குமா? வெளியில் இருந்து வந்து பிஹாரில் முகாமிட்டிருக்கும் ஜனநாயகக் கொள்ளையர்களின் அறிவுறுத்தலின் பேரில் இவை அனைத்தும் நடக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியது.
பிஹார் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6ல் நடைபெற்றது, அப்போது வாக்குப்பதிவு 65.08 சதவீதமாக இருந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது, அதன் முடிவுகள் நவம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்படும்.