சுபால்: பிஹாரில் மாற்றம் நிச்சயமாக வரும் என்பதை முதல்கட்ட தேர்தலில் பதிவான அதிகளவிலான வாக்குப்பதிவு காட்டுகிறது என்றும், 65.08% வாக்காளர்கள் முதல்கட்ட தேர்தலில் பங்கேற்றுள்ளதாகவும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
சுபாலில் இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “தேர்தல் ஆய்வாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் பிஹாரில் என்ன நடக்கப் போகிறது என்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறுகின்றனர். ஆனால் நாட்டின் அரசியல் வரலாற்றில் பிஹாரில் அதிக வாக்குப்பதிவு நடக்கும் என்று யாரும் கணிக்கவில்லை. பிஹாரில் மாற்றம் நிச்சயமாக வரும் என்பதை முதல்கட்ட தேர்தலில் பதிவான அதிகளவிலான வாக்குப்பதிவு காட்டுகிறது.
ஜன் சுராஜ் கட்சி பிஹார் அரசியலில் முதன்முதலில் கால் பதிக்கிறது. தற்போதுள்ள அரசியல் அமைப்புக்கு ஓர் உண்மையான மாற்றாக எங்கள் கட்சி விளங்குகிறது. 30 ஆண்டுகளாக ஒரே அரசியலை பார்த்த வாக்காளர்கள் மாற்றத்தைத் தேடுகிறார்கள். பிரதமருக்கு சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால், ஆர்ஜேடி மீது பயத்தை விதைத்து வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார். ஆனால் இந்த முறை நிலைமை மாறிவிட்டது. நீங்கள் காட்டாட்சி திரும்பக்கூடாது என்று சொன்னால், தேசிய ஜனநாயக கூட்டணி ஏன் வேண்டும்? ஜன் சுராஜ்தான் பிஹாரின் புதிய மாற்று.
சுதந்திரத்திற்குப் பிறகு பிஹாரில் இதுவே மிக அதிகமான வாக்கு சதவீதம். இது இரண்டு விஷயங்களைக் காட்டுகிறது: கடந்த ஆண்டு நான் சொன்ன விஷயம், பிஹாரின் 60% க்கும் அதிகமான மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஒரு மாற்று இல்லை என்ற எண்ணம் மக்களிடம் மாறியுள்ளது. ஜன் சுராஜ் வந்த பிறகு, மக்களுக்கு ஒரு மாற்று கிடைத்தது. மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்" என்று கூறினார்.
பிஹார் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று அறிவித்தார். முன்னதாக 64.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதிகாரபூர்வமான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.