புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசியில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி முதல் முறையாக நடத்தப்பட்டது.
வாராணசிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள பண்டைய காலம் முதல் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. வாராணசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். எனவே, அவரே காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த அறிவுறுத்தினார். அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் தளத்தில், ‘‘தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையிலான நித்திய பிணைப்பை கொண்டாடுதல். ‘பன்முகத்தன்மையில் ஒற்றுமை’, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அறிவின் புனித சங்கமம் மீண்டும் ஒருமுறை திரும்புகிறது! காசி தமிழ்ச் சங்கமம் 2025 (கேடிஎஸ் 4.0) - தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையிலான காலத்தால் அழியாத நாகரிக இணைப்பைக் கொண்டாடுகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை மீண்டும் உறுதிப்படுத்துகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வாராணசி மண்டல ஆணையரும் கேடிஎஸ் 4.0 வின் முக்கியப் பொறுப்பாளருமான தமிழர் எஸ்.ராஜலிங்கம் கூறியதாவது: இந்த முறை காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு 7 பிரிவினர் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட உள்ளனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஊடகங்கள், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கைவினைஞர்கள், பெண்கள் மற்றும் ஆன்மீக அறிஞர்கள் அந்தக் குழுக்களில் இடம்பெறுகின்றனர்.
மேலும் 1,400-க்கும் மேற்பட்டவர்களுடன் 7 ரயில்கள் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்புகிறது. முதல் குழு, நவம்பர் 30 அன்று ரயிலில் கிளம்பி டிசம்பர் 2 காலை வாராணசி சேருகின்றனர். மேலும் பல புதிய நிகழ்ச்சிகளை கேடிஎஸ் 4.0-ல் சேர்க்க திட்டமிட்டு வருகிறோம்.
இவ்வாறு எஸ்.ராஜலிங்கம் கூறினார்.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை டிசம்பர் 2-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த முறை தமிழ்ச் சங்கமத்தின் நிறைவு விழாவை ராமேஸ்வரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் பொருளாக ‘தமிழ் கற்பித்தல்’ தேர்வு செய்யப்பட்டள்ளது. அதன்படி தமிழகத்தில் இருந்து வரும் ஆசிரியர்கள், வாராணசி கல்லூரி மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ்மொழியைக் கற்றுக் கொடுக்க உள்ளனர். அதேபோல், வாராணசியில் இருந்தும் கல்லூரி மற்றும் பள்ளிகளின் 300 மாணவர்கள் 30 குழுக்களாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இவர்கள் ஐஐடி, அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சாஸ்திரா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கியக் கல்வி நிலையங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
வாராணசி வருபவர்களை பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு அழைத்துச் செல்ல உள்ளனர். இங்குள்ள கோயில்களில் தரிசனங்கள் முடித்து அனைவரும் வீடு திரும்பும் வரையிலான செலவுகளை மத்திய அரசும், உ.பி. அரசும் இணைந்து செய்கின்றன.