இம்பால்: மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த 24 தீவிரவாத அமைப்புகளுடன் மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசு சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்தது. ஆனால் இதில் ஐக்கிய குகி தேசிய ராணுவம் (யுகேஎன்ஏ) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கையெழுத்திடவில்லை. அவர்கள் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மணிப்பூரின் கான்பி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் யுகேஎன்ஏ தீவிரவாதிகள் 17 பேர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினர் சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.