விபத்துக்குள்ளான ரயில் 
இந்தியா

சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

ஆனந்த்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோர்பா பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

பிலாஸ்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் - காட்னி இடையே லால் காடன் பகுதிக்கு அருகில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில், பயணிகள் ரயிலின் முன்பக்க பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜ்னீஷ் உறுதிப்படுத்தியுள்ளார். "மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த உடனே ரயில்வே அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்புப் படை அடங்கிய மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இடிபாடுகளில் சிக்கி இருந்த ஒரு குழந்தை உட்பட பலரை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதிக்கு மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு, பலருக்கு ரயில் பெட்டிக்குள்ளேயே சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. விபத்தால் சிக்கித் தவித்த பயணிகளுக்கு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விபத்து காரணமாக மின்சார வயரிங் மற்றும் சிக்னல் அமைப்பு பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் , இதனால் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது திருப்பிவிடப்பட்டுள்ளன. மீண்டும் பாதையை சீர் செய்யும் பணியில் தொழில்நுட்பக் குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். முதற்கட்ட தகவலின்படி, சிக்னல் செயலிழப்பு அல்லது மனித தவறு காரணமாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT