இந்தியா

ஸ்ரீகாகுளம் கோயிலில் கூட்ட நெரிசல்: 8 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?

என். மகேஷ்குமார்

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள், 12 வயது சிறுவன் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா கிராமத்தில்  வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இதனை ஹரிமுகுந்த் பண்டா என்பவர் கட்டினார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. தனது சொந்த ஊரில் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் வெங்கடேச பெருமாள் கோயிலை கட்டினார். பக்தர்களிடம் ரூ.20 கோடி வரை நன்கொடை பெற்றார். 4 ஆண்டுகள் முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த மே மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராம மக்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

சனிக்கிழமைகளில் வழக்கமாக 2 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள். நேற்று ஏகாதசி சனிக்கிழமை என்பதால் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். கோயிலின் முதல் மாடியில் பெருமாள் கருவறை உள்ளது. அனைவரும் படியேறிச் சென்று சுவாமியை வழிபட வேண்டும். முதல் மாடிக்கு செல்லும் வழியில் இடதுபக்கம் இரும்பு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டிருந்தது. அதன் மீது பக்தர்கள் சாய்ந்ததால் அது உடைந்தது.

இதனால் பலர் கீழே விழுந்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒருவர்மீது ஒருவர் மிதித்துக் கொண்டு ஓடியதால், பலர் கீழே விழுந்தனர். இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்தில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்த 16 பேரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலரை மேல் சிகிச்சைக்காக காகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர். மொத்தத்தில் 8 பெண்கள், 12 வயது சிறுவன் உயிரிழந்ததாக காகுளம் மாவட்ட ஆட்சியர்அறிவித்துள்ளார். தற்போது 13 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பிரதமர் ரூ.2 லட்சம் நிதி: நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்,காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர்பவன் கல்யாண் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT