புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களின் வாக்கு சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் பெண் வாக்காளர்களைக் கவர பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுகின்றன.
ஆனால், தேர்தலில் போட்டியிடும் விஷயத்தில் பெண்களுக்கு அந்தளவுக்கு வாய்ப்பளிப்பதில்லை. இந்த தேர்தலில் 2,357 ஆண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால், பெண் வேட்பாளர்கள் 258 மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளில் இந்த முறைதான் குறைந்த எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களை அனைத்து அரசியல் கட்சிகளும் களமிறக்கி உள்ளன.
பாஜக 13, காங்கிரஸ் 5, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 13, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 23 என பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சியில் 25, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பிஎஸ்பி சார்பில் 26 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலில், 370 பெண் வேட்பாளர்களில் 26 பேர் வெற்றி பெற்றனர்.
கடந்த 2020 தேர்தலில் 22 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியது ஜேடியு. இந்த முறை வெறும் 13 பெண்களுக்கு மட்டுமே ஜேடியு வாய்ப்பளித்துள்ளது. கடந்த 2015-ல் 9 பெண்களுக்கு வாய்ப்பளித்த ஆர்ஜேடி, இந்த தேர்தலில் 23 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.
பாஜக கடந்த 3 தேர்தல்களிலும் சராசரியாக ஒரே நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிபிஐ(எம்எல்) 2015 முதல் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது. காங்கிரஸும் நிலையான சரிவைக் கண்டுள்ளது.
2020 சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக பெண் வேட்பாளர்கள் 69 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர். மேலும் ஆர்ஜேடி 44, காங்கிரஸ் 29 மற்றும் ஜேடியு 27 என்ற சதவீதத்தில் பெண்கள் வெற்றி பெற்றனர். பிஹாரில் என்டிஏ கூட்டணி அரசு பெண்களுக்கான பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.