சித்தூர்: சித்தூர் பெண் மேயர், அவரது கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்ககப்பட்டு உள்ளது. சித்தூர் மாவட்ட தெலுங்கு தேசம் கட்சியின் துணைத் தலைவர் கட்டாரி மோகன். இவரது மனைவி அனுராதா. இவர், சித்தூர் மாநகராட்சியின் முதல் மேயர் ஆவார்.
கட்டாரி மோகனின் அக்கா மகன் சிண்டு. இவர்களுக்கிடையே அரசியல், பொருளாதார ரீதியான மோதல்கள் நீடித்து வந்தன. மேலும் சிண்டுவுக்கு தாய் மாமாவான கட்டாரி மோகன் பெண் தர மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி சித்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அனுராதா பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது கணவர் கட்டாரி மோகன் பக்கத்து அறையில் கட்சிக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சிண்டு உட்பட 5 பேர், பர்தா உடை அணிந்து மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து மேயர் அனுராதா, கட்டாரி மோகனை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பினர்.
இது குறித்து சித்தூர் முதலாவது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சித்தூர் கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கோசரம் ரமேஷ் என்பவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஸ்ரீநிவாசாச்சாரி என்பவர் உயிரிழந்தார். எஞ்சிய 21 பேர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
இறுதியில் ஸ்ரீராம் சந்திரசேகர் என்கிற சிண்டு, வெங்கடாசலபதி என்கிற வெங்கடேஷ், ஜெயப்பிரகாஷ் என்கிற ஜெயா ரெட்டி, மஞ்சுநாத் என்கிற மஞ்சு, முனிரத்தினம் வெங்கடேஷ் ஆகிய 5 பேர் குற்றவாளிகள் என்று சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளிக்கப்பட்டது. எஞ்சிய 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை சித்தூர் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி நிவாச ராவ் நேற்று அறிவித்தார். இதன்படி சிண்டு உட்பட 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அனுராதா, கட்டாரி மோகனின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, தடுக்க வந்து காயமடைந்த வேலூரி சதீஷ் என்பவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு என ரூ.70 லட்சத்தை சிண்டு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் 5 பேருக்கும் நேற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு கடப்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டது.