புதுடெல்லி: பஞ்சாப் அரசு சார்பில் சண்டிகரில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட சொகுசு மாளிகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இது ‘கேஜ்ரிவாலின் சீஷ் மஹால் 2.0’ என்று பாஜக விமர்சித்துள்ளது.
டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவி வகித்தபோது சிவில் லைன்ஸ் பகுதி, பிளாக் ஸ்டாப் சாலையில் உள்ள அரசு வீட்டில் வசித்து வந்தார். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த வீடு ரூ.171 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு சொகுசு மாளிகையாக மாற்றப்பட்டது.
ரூ.5.6 கோடியில் ஜன்னல் திரைகள், குளியல் அறை உள்ளிட்டவை மூலம் வீடு அலங்கரிக்கப்பட்டது. கேஜ்ரிவால் வசித்த ஆடம்பர மாளிகை மற்றும் அந்த மாளிகையின் உள்ளே இருந்த ஆடம்பர பொருட்களின் புகைப்படங்கள் கடந்த 2024-ம் ஆண்டில் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின. அப்போது பாஜக தரப்பில், கேஜ்ரிவால் வசித்த ஆடம்பர மாளிகை சீஷ் மஹால் (கண்ணாடி மாளிகை) என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது கேஜ்ரிவாலின் ஆடம்பர மாளிகை பிரதான விவாதப் பொருளாக இருந்தது.
இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. டெல்லி முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தா, கேஜ்ரிவாலின் ஆடம்பர மாளிகையில் தங்காமல் சாதாரண பங்களாவில் குடியேறினார்.
இந்த சூழலில் பஞ்சாப் அரசு சார்பில் சண்டிகரில் 2 ஏக்கர் பரப்பில் 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஆடம்பர மாளிகை கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படத்தை பாஜக தலைமை சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டது. அதோடு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் தன்னை சமானிய மனிதர் என்று கூறி நடித்து வருகிறார். ஆனால் அவர் டெல்லியில் தனக்காக பிரம்மாண்ட சீஷ் மஹாலை உருவாக்கினார். அந்த மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு தற்போது பஞ்சாபின் சூப்பர் முதல்வராக அவர் செயல்பட்டு வருகிறார். தற்போது டெல்லி மாளிகையைவிட சண்டிகரில் 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஆடம்பர மாளிகை அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது கேஜ்ரிவாலின் சீஷ் மஹால் 2.0 ஆகும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.