இந்தியா

லைபீரியாவில் இருந்து 112 இந்தியர்கள் திரும்புகின்றனர்: மும்பை விமான நிலையத்தில் சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடு

செய்திப்பிரிவு

எபோலா தொற்று நிலவும் லைபீரியா, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள் 112 பேரை கண்காணிக்க மும்பை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மும்பை விமான நிலையம் மருத்துவக் குழுவுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் எபோலா நோய் தொற்று உலகிலேயே அதிகமாக உள்ளது. லைபீரியா, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல்வேறு விமானங்களில் 112 இந்தியர்கள் வருகின்றனர். இவர்கள் அனைவரும், மும்பை சத்திரபதி விமான நிலையத்திற்கு வருகின்றனர்.

விமானத்தில் இருந்து இறங்கும் போதே முதல் கட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அப்போது, யாரேனும் பயணிகளுக்கு எபோலா வைரஸ் (Ebola Virus Disease-EVD) நோய் தாக்கம் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை உடனடியாக அங்கிருந்தே நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

112 பயணிகளும் எதியோபியன் ஏர்லைன், எமிரேட்ஸ் விமானம், எடிஹாட் விமானம் கத்தார் ஏர்வேஸ், சவுத் ஆப்பிரிக்கா ஏர்வேஸ் மூலம் இந்தியா வருகின்றனர்.

இந்த விமானங்களில் இருந்து பயணிகள் இறங்கிய பின்னர், விமானமும் நோய்க் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் சுத்தப்படுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பின்னரே, மீண்டும் பயணிகள் அவற்றில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

SCROLL FOR NEXT