புதுடெல்லி: போலியான நீதிமன்ற ஆவணங்களை காட்டி நடைபெறும் டிஜிட்டல் கைது முறைகேடுகள் தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு, சிபிஐ பதில் அளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, டிஜிட்டல் கைது முறைகேடுகளை செய்யும் கும்பல் பல நேரங்களில் மியான்மர், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து இயங்கி வருவதையும், இதுபோன்ற வழக்குகளை சிபிஐ ஏற்கெனவே விசாரித்து வருவதையும் குறிப்பிட்டனர்.
இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், இ்ந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். பதில் மனுவை பரிசீலித்த பிறகு டிஜிட்டல் கைது முறைகேடு வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.