பாட்னா: லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) தலைவர் சிராக் பஸ்வானுக்கு அதிகார பசி அதிகமாக உள்ளது என்று ராஷ்டிர ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக உள்ளவர் தேஜஸ்வி யாதவ். கடந்த 2005-ம் ஆண்டு பிஹாரில் ஒரு முஸ்லிமை முதலமைச்சராக்க தனது தந்தை விரும்பியதாகவும், ஆனால், ஆர்ஜேடி அதற்கு உடன்படவில்லை எனவும் சிராக் பஸ்வான் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு தேஜஸ்வி யாதவ் அளித்த பதிலில் ‘‘சிராக் பஸ்வான் என்ன சொல்கிறார் அல்லது சொல்லவில்லை என்பது தற்போது முக்கியமல்ல. அவருடைய தொலைநோக்கு தி்ட்டம்தான் என்ன. ஆளும் என்டிஏ கூட்டணியில் இருப்பதை பஸ்வான் அசவுகரியமாக உணர்கிறார்.
ராம் விலாஸ் பஸ்வான் இறந்த பிறகு சிராக் பஸ்வானுக்கும் அவரது உறவினரும் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான பசுபதி குமார் பராஸுக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கு என்டிஏ கூட்டணியினர்தான் காரணம். சிராக் அதிகார பேராசையால் என்டிஏவுடன் கூட்டணி சேர்ந்து உள்ளார். அவர் அதிகாரத்துக்காக அனைத்தையும் சமரசம் செய்து கொள்கிறார். அதனால்தான் அவரது கருத்துகளை முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஒரு முஸ்லிமுக்கு முதல்வர் அல்லது துணை முதல் பதவி வழங்க ஆர்ஜேடி தயாராக இல்லை என்று சிராக் கூறியதையடுத்து தேஜஸ்வி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.