பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமார் முதல்வராக முடியாது என்று ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சஹர்சா மாவட்டத்தில் உள்ள சிம்ரி பக்தியார்பூரில் நேற்று நடைபெற்ற பேரணியில் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களால் முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக தெரிவித்துவிட்டார். இதனால்
என்டிஏ கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக முடியாது.
தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் 11 ஆண்டுகளாகவும், 20 ஆண்டுகள் மாநிலத்திலும் ஆட்சி செய்த போதிலும், பிஹார் மாநிலம் ஏழ்மையாக உள்ளது. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.