இந்தியா

தமிழக பாசனத்துக்கு கேரள வெள்ள நீர்: கண்காணிக்க மத்திய குழு நியமனம்

செய்திப்பிரிவு

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் இருமாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பகிர்வு திட்டங்களுக்கு கூடுதல் தண்ணீரை திறந்து விடும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட மத்திய நீர்வள ஆணைய தலைவர் தலைமையில் கமிட்டி ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது.

கேரளாவில் இந்த நூற்றாண்டில் இல்லாத அளவு மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்மழையால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பித் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து ஆறுகளிலும் வெள்ள நீர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி பாய்ந்து செல்கிறது.

மாநிலத்தில் மீட்புப்பணியில் ராணுவத்தினர், பேரிடர் மீட்புக்குழுவினர், போலீஸார், தீயணைப்பு படையினர் எனப்பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரு மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பகிர்வு திட்டத்தின் கீழ் கேரளாவில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரை தமிழக நீர்பகிர்வு திட்டங்களுக்கு கூடுதலாக திருப்பி விட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மத்திய நீர்வள ஆணைய தலைவர் தலைமையில் கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இரு மாநிலங்கள் இடையே முல்லைப்பெரியாறு, நெய்யாறு, ஆழியாறு என  பல நீர் பகிர்வு திட்டங்கள் ஏற்கெனவே உள்ளன. முல்லைப்பெரியாறு அணை நிரம்பி வழியும் நிலையில், அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கக்கூடாது என கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுமட்டுமின்றி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதுபோலவே ஆழியாறுக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினையில் இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக ஏற்பாட்டை செய்யும் வகையில் மத்திய அரசு ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தியுள்ளது. கேரள அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து அதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் திறக்க மத்திய குழு நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT