இந்தியா

நவி மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு; 14 பேர் காயம்

ஆனந்த்

மும்பை: மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

நவி மும்பையின் வாஷி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் நள்ளிரவுக்குப் பின் சுமார் 12.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், தீ 11 மற்றும் 12வது மாடிகளுக்கும் பரவியுள்ளது. இது குறித்த தகவல் கிடைத்ததும் 8 தீ அணைப்பு வாகனங்களில் 40 தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ஒருவர், "தீ விபத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண், 6 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் வாஷி பகுதியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலர் வீடு திரும்பி உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT