விசாகப்பட்டினத்தில் கூகுள் ஏஐ மையம் அமைக்க டெல்லியில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் நாரா லோகேஷ், கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: பிடிஐ 
இந்தியா

ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் ஆந்திராவில் கூகுள் ஏஐ மையம்: பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை ஆலோசனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் சார்பில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையம் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்காவின் ஆல்பாபெட் நிறுவனம், உலகின் 3-வது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. கூகுள், வேமோ, ஜி.வி., விங், வெரிலி, காலிகோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை ஆல்பாபெட் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கூகுள் சார்பில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையம் அமைக்க டெல்லியில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் நாரா லோகேஷ், கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, “இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். இந்தியாவின் முதல் கூகுள் ஏஐ தரவு மையம் ஆந்திராவில் அமைகிறது. இதன்மூலம் மாநிலத்தின் தொழில் துறை அபார வளர்ச்சி அடையும்" என்று தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, “அந்தமான் கடல் பகுதி வழியாக சர்வதேச பைபர் கேபிள் இணைப்பு வசதியை ஏற்படுத்துவது குறித்து கூகுள் நிறுவனம் ஆய்வு செய்ய வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார். கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியன் கூறும்போது, “அமெரிக்காவுக்கு வெளியே கூகுளின் மிகப்பெரிய ஏஐ மையம் இந்தியாவில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் துறை வளர்ச்சியில் கூகுள் ஏஐ மையம் முக்கிய மைல்கல்லாக இருக்கும். இந்திய தொழில் துறையில் ஏஐ உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். புதிய வாய்ப்புகள் உருவாகும்" என்று தெரிவித்தார்.

விசாகப்பட்டினம் ஏஐ மையம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று தொலைபேசி மூலம் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் சுந்தர் பிச்சை வெளியிட்ட பதிவில், “விசாகப்பட்டினத்தில் கூகுள் ஏஐ மையம் அமைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்தேன். இந்த மையம் பல ஜிகாவாட் திறன் கொண்டதாக இருக்கும். அதோடு சர்வதேசத் தின் நுழைவுவாயிலாகவும் இருக்கும். புதிய மையம் மூலம் இந்திய நிறுவனங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சி அடைய கூகுள் ஏஐ மையம் உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “விசாகப்பட்டினத்தில் கூகுள் ஏஐ மையம் தொடங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இந்த மையம் உறுதுணையாக இருக்கும். இதன்மூலம் இந்தியர்கள் அனைவரையும் ஏஐ தொழில்நுட்பம் சென்றடையும். சர்வதேச தொழில்நுட்ப உலகில் இந்தியா முன்னோடியாக உருவெடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

அதானி, ஏர்டெல்: இந்த கூகுள் ஏஐ மையம் திட்டத்தில் அதானி குழுமம், ஏர்டெல் நிறுவனம் இணைந்துள்ளன. இதுகுறித்து கவுதம் அதானி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ கூகுளுடன் இணைந்து விசாகப்பட்டினத்தில் ஏஐ மையத்தை அமைக்க உள்ளோம். இந்தியாவின் சுகாதாரத் துறை, வேளாண்மை, சரக்கு போக்குவரத்து, நிதி ஆகிய துறைகளுக்கு தேவை யான தீர்வுகளை கூகுள் ஏஐ மையம் வழங்கும்" என்று தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினம் ஏஐ மையத்தின் மூலம் ஆந்திராவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT