புதுடெல்லி: இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அனிதா ஆனந் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு கூட்டாண்மைக்கு இந்த சந்திப்பு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
வர்த்தகம், எரிசக்தி. தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து அனிதா ஆனந்திடம் பிரதமர் எடுத்துரைத்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, சட்ட அமலாக்கம், பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜி7 உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கர்னியுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்தைக்குப் பிறகு இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்தடைந்த நிலையில், அவர் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அப்போது, சர்வதேச பொருளாதாரத்தை ஆபத்திலிருந்து விடுவிப்பதற்கு மட்டுமல்லாமல், இருதரப்பு ஒத்துழைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்முறையை மேம்படுத்த இரு நாடுகளும் நீண்ட மற்றும் ஆழமான உறவுகளை உருவாக்க வேண்டும் என்று ஜெய்சங்கர் அனிதா ஆனந்திடம் வலியுறுத்தினார்.
கடந்த மே மாதம் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அனிதா ஆனந்த் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.