இந்தியா

பாஜகவுக்கு இணையான தொகுதிகளை நிதிஷ் பெற்ற ரகசியம்: சிராக் பாஸ்வானால் பலன் கிடைக்குமா?

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் மீண்டும் பாஜகவுக்கு இணையான தொகுதிகளை முதல்வர் நிதிஷ்குமார் கட்சி பெற்றது எப்படி?. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வானும் இணைந்திருப்பதன் மூலம் பலன் கிடைக்குமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

பிஹாரின் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரான முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சியில் உள்ளது.

இந்த தேர்தலில் தொடரும் கூட்டணியில் நிதிஷ் கட்சி, பாஜகவுக்கு இணையாக 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் வெளியாகி வருகின்றன.

பிஹாரில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின்(ஆர்ஜேடி) 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தவர் ஜேடியுவின் தலைவர் நிதிஷ்குமார். இவர் 2005-ல் ஆட்சிக்கு வந்தபின், பாஜகவுக்கு சமமான இடங்களில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.

இதற்கு பிஹாரின் கூட்டணிக்குள் பாஜகவின் அரசியல் செல்வாக்கு அதிகரித்திருப்பது காரணம். அதேசமயம், முதல்வர் நிதிஷின் மூப்பு வயது, ஆளும் கட்சிக்கு எதிரான நிலை உள்ளிட்டக் காரணங்களால் ஜேடியுவுக்கு செல்வாக்கு குறைந்துள்ளது.

2020 சட்டமன்றத் தேர்தலில், ஜேடியு 115 இடங்களிலும், பாஜக 110 இடங்களிலும் போட்டியிட்டன. முன்னாள் முதல்வரான ஜிதன் ராம் மாஞ்சியின் எச்ஏஎம் 7 இடங்களிலும் போட்டியிட்டது. முகேஷ் சாஹ்னியின் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) 4 இடங்களில் போட்டியிட்டது. தற்போது விஐபி இண்டியா கூட்டணியில் இணைந்துள்ளது.

ராஜ்யசபா உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சாவும் ஆறு இடங்களைப் பெற்றது. இக்கட்சி இடைப்பட்ட காலத்தில் என்டிஏவிலிருந்து விலகி மீண்டும் இணைந்திருந்தது.

தேசிய அளவில் என்டிஏவில் இடம்பெற்றாலும் எல்ஜேபியின் சிராக் பாஸ்வான் கடந்த முறை பிஹாரில் தனித்து போட்டியிட்டார். 135 இல் போட்டியிட்டும் அவரது கட்சி 1-ல் மட்டுமே வென்று நிதிஷுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

இதன் தாக்கமாக, பாஜகவின் 74-ஐவிட ஆளும் ஜேடியு குறைந்த தொகுதிகளாக 43 பெற்றது. இதையடுத்து, சிராக் பாஸ்வானின் நடவடிக்கைக்கு பாஜகவின் ’மறைமுக ஒப்புதல்’ கிடைத்ததாகவும் ஜேடியுவில் புகார்கள் கிளம்பியிருந்தன.

இந்த முறை மத்திய அமைச்சரான சிராக்கின் எல்ஜேபிக்கு 29 தொகுதிகளுடன் என்டிஏவில் இணைத்துள்ளது. இதனால், என்டிஏ தனது போட்டியை எளிதாக்கி மீண்டும் ஆட்சி அமைக்கும் என பாஜக நம்புகிறது.

இது குறித்து பிஹார் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும் மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் கூறுகையில், ’அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் பரஸ்பர ஒப்புதலின் மூலமும், நல்லெண்ண சூழலிலும் தொகுதி உடன்பாட்டை முடித்துவிட்டன.

அனைத்து கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் இதை வரவேற்கிறார்கள். பிஹார் மீண்டும் ஒரு தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திற்கு தயாராக உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

பிஹாரின் எதிர்க்கட்சியான லாலுவின் ஆர்ஜேடி தலைமையில் இண்டியா கூட்டணி உறுப்பினர்களுடன் மெகா கூட்டணி அமைந்துள்ளது. இது, இந்த தேர்தலில் என்டிஏவிற்கு சவாலாகி வருகிறது.

நவம்பர் 6 ஆம் தேதி அன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மீதமுள்ள 122-க்கு நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக நடைபெறுகிறது. இதன் முடிவுகள் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளன.

SCROLL FOR NEXT