யூ.பி.எஸ்.சி. திறனாய்வுத் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை கடும் அமளி ஏற்பட்டது. மாநிலங்களவையில் அரசைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.
மக்களவையில் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி. பப்பு யாதவ் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். யூ.பி.எஸ்.சி. தேர்வு விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
இதனை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமுற்ற பப்பு யாதவ் கையில் வைத்திருந்த நாளிதழை கிழித்து காகிதத் தாள்களை சபாநாயகரை நோக்கி வீசியெறிந்தார். அவரின் செயலுக்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார். “உங்கள் நடவடிக்கை அநாகரிகமானது. இதனை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் கண்டித்தார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
யூ.பி.எஸ்.சி. தேர்வு விவகாரத்தை மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தள எம்.பி. சரத் யாதவ் பேசியபோது, ஒரு வாரத்துக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் பதிலளித்துப் பேசியபோது, நிபுணர் குழுவின் அறிக்கை இன்றுதான் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, இதனை ஆய்வு செய்ய அவகாசம் தேவை என்று தெரிவித்தார்.
அமைச்சரின் பதிலில் திருப்தி அடையாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.