இந்தியா

சோனம் வாங்சுக்கை விடுவிக்கக்கோரி அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனு

ஆனந்த்

புதுடெல்லி: தனது கணவரை விடுவிக்கக்கோரி சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்து வழங்​கக் கோரி​யும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் சமூக ஆர்​வலரும், கல்​வி​யாள​ரு​மான சோனம் வாங்​சுக் கடந்த மாதம் உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்தார். வேறு சில அமைப்​பு​களும் இதில் கலந்து கொண்டன.

லடாக் யூனியன் பிரதேசத்​துக்கு மாநில அந்​தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்​குள்ள லே உச்ச அமைப்பு (எல்​ஏபி) சார்​பில் நடத்​தப்​பட்ட போராட்​டம் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி வன்​முறை​யாக மாறியது. போராட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த முயன்ற பாது​காப்​புப் படை​யினர் நடத்​திய துப்​பாக்​கிச்​ சூட்​டில் 4 பேர் உயிரிழந்​தனர்.

இதையடுத்து, லடாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கடந்த 26-ம் தேதி சோனம் வாங்​சுக்கை லடாக் போலீ​ஸார் கைது செய்​தனர். பின்னர், ராஜஸ்தானின் ஜோத்பூர் மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். சோனம் வாங்​சுக்​குக்கு சொந்​த​மான இமாலயன் இன்​ஸ்​டிடியூட் ஆப் ஆல்​டர்​நேட்​டிவ்ஸ் லடாக்​(எச்​ஐஏஎல்) என்ற பெயரிலான இன்​ஸ்​டிடியூட்​டுக்கு வெளி ​நாடு​களில் இருந்து ரூ.1.5 கோடி நிதி முறை​கே​டான வழி​யில் வந்​துள்​ள​தாக மத்​திய உள்​துறை அமைச்​சகம் புகார் தெரி​வித்​துள்​ளது. மேலும், சோனம் பாகிஸ்தான் சென்று வந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தனது கணவர் சோனம் வாங்சுக்கை விடுவிக்கக் கோரி அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சோனம் வாங்சுக்கின் தடுப்புக் காவலுக்கு எதிராக ஆட்கொணர்வு (ஹீபஸ் கார்பஸ்) மனு மூலம் உச்ச நீதிமன்றத்திடம் நிவாரணம் கோரியுள்ளேன். சோனம் வாங்சுக்கின் உடல்நிலை, அவர் இருக்கும் நிலை அல்லது தடுப்புக் காவலுக்கான காரணங்கள் குறித்து இதுவரை எனக்கு எந்த தகவலும் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, செப்டம்பர் 24 வன்முறைக்குப் பிறகு மத்திய அரசை கீதாஞ்சலி ஆங்மோ கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார். "இந்தியாவில் உண்மையிலேயே சுதந்திரம் இருக்கிறதா? 1857ம் ஆண்டில் இங்கிலாந்து அரசியின் உத்தரவின் பேரில், 24,000 பிரிட்டிஷ்காரர்கள், 1,35,000 இந்திய சிப்பாய்களைப் பயன்படுத்தி 30 கோடி இந்தியர்களை ஒடுக்கினர். இன்று, ஒரு டஜன் நிர்வாகிகள் 2400 லடாக் காவல்துறையினரை தவறாகப் பயன்படுத்தி உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில் 3 லட்சம் லடாக் மக்களை ஒடுக்கி சித்ரவதை செய்கின்றனர்” என தனது எக்ஸ் பக்கத்தில் கீதாஞ்சலி ஆங்மோ குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், சோனம் வாங்சுக்கை விடுவிக்கக் கோரி குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கீதாஞ்சலி ஆங்மோ மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT