இந்தியா

காதலிக்காக இந்துவாக மதம் மாறி திருமணம் செய்த காதலன்: பாசப் போராட்டத்தில் பெற்றோருடன் இணைந்த பெண்

செய்திப்பிரிவு

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் அஞ்சலி ஜெயின். இப்ராஹிம், என்பவரை காதலித்து வந்த நிலையில், அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்ராஹிம் தனது காதலி அஞ்சலி ஜெயினின் பெற்றோரை சந்தித்து தாம் இந்து மதத்துக்கு மாற தயாராக இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து வைக்குமாறும் கேட்டார்.

ஆனால், அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து ஆரிய சமாஜ் அமைப்பின் மூலம் இந்து மதத்துக்கு மாறிய இப்ராஹிம் தனது பெயரை ஆரியன் ஆர்யா என்று மாற்றிக் கொண்டார். அஞ்சலியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத நிலையில், வீட்டிற்கு தெரியாமல் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்து கொண்டாலும், சினிமா பாணியில், அஞ்சலி தனது வீட்டிலும், ஆர்யா அவரது வீட்டிலும் வசித்து வந்தனர். கடந்த ஜூன் மாதத்தில் அஞ்சலி தனக்கு திருமணம் நடந்த விவரத்தை வீட்டில் தெரிவிக்கவே, குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்தநிலையில், ஜூன் மாதம் 30-ம் தேதி இரவு அவர் வீட்டை விட்டு வெளியேறிய தனது கணவனை தேடிச் சென்றார். ஆனால் வழியிலேயே அவரை போலீஸார் வழி மறித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கிருந்து அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

தனது மனைவி அஞ்சலியை அவரது தந்தை அசோக் ஜெயின் தலையீட்டால் போலீஸார் கைது செய்து அவரது விருப்பத்துக்கு மாறாக அரசு பெண்கள் விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக கூறி சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் அஞ்சலிக்கு 23 வயது ஆவதால் அவரது சொந்த விருப்பத்தின் பேரில் பெற்றோருடனோ அல்லது அரசு காப்பகத்திலேயோ இருக்கலாம் என தீர்ப்பளித்தனர். இதையடுத்த ஆர்யா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

தனது மனைவி அஞ்சலியை கடத்தி அவரது தந்தை அரசு மற்றும் காவல்துறை உதவியுடன் கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரினார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜரானார். அஞ்சலி 23 வயது மேஜரான பெண் என்பதால் அவர் முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதாகவும், அவர் விருப்பப்படி செல்லலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் அஞ்சலியை ஆஜர்படுத்தும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆஜரான அஞ்சலி என்ன சொல்லப்போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தனது பெற்றோருடனே செல்ல விரும்புவதாக கூறினார். அவரது விருப்பப்படி பெற்றோருடன் செல்லலாம் எனக் கூறி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

SCROLL FOR NEXT