இந்தியா

பிரதமர் மோடி சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சாத்தியமற்றதை சாத்தியமாக்கி வருகிறார் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பின்னர் அவர் தனது முதல் பொது நிகழ்வில் கலந்துகொண்டார். புதுடெல்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உரைகளின் இரண்டு தொகுப்புகள் உள்ளடக்கிய 4 நூல்களை சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்

இந்த நிகழ்ச்சியில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், “அமெரிக்காவால் இந்தியா மீது 50% வரி சுமத்தப்பட்டிருந்தாலும், ட்ரம்ப் எப்போதும் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் என்று கூறி வருகிறார். இந்த சூழ்நிலையிலும் கூட, தான் மோடியை எதிர்க்கிறேன் என்று அவர் கூறவில்லை. தான் மோடிக்கு ஆதரவாக இருக்கிறேன் என்றே அவர் எப்போதும் கூறி வருகிறார். இதைப்போலவே பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பராகவும் உள்ளார்.

அதே நேரத்தில், சர்வதேச அரசியலில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியின் நல்ல நண்பராக உள்ளார். இன்று நாம் கண்டது இதுதான். அதனால்தான் அவர் சாத்தியமற்றதையெல்லாம் சாத்தியமாக்குகிறார். பிரதமர் தூய இதயத்துடன் மக்களுக்காக பணி செய்கிறார், அவர் பதிலுக்கு எதையும் எதிர்பார்க்கவில்லை. இதுதான் பிரதமர் மோடியின் அணுகுமுறையாகும்.

இந்த உரைகளைப் படிக்கும்போது, ​​பிரச்சினைகளுக்கான அணுகுமுறை, எண்ணங்களைப் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் மக்களின் உணர்வுகளை புறக்கணிக்காமல் செயல்படுத்துவது எப்படி என புரிந்துகொள்ள முடியும். மேலும் நலத்திட்டங்கள் சமூகத்தின் கடைசி நபரை சென்றடைவதை உறுதி செய்வதற்கான அவரது விருப்பத்தையும் இந்த உரைகளின் மூலம் தெரிந்துகொள்ளலாம்” என்று கூறினார்

SCROLL FOR NEXT