புதுடெல்லி: நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. பின்னர் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். இதையடுத்து, இடைக்கால அரசின் பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “நேபாள இடைக்கால அரசின் பிரதமர் சுசீலா கார்கியுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது, சமீபத்தில் நடந்த வன்முறையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டேன்.
மேலும் அந்நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அவர் எடுத்து வரும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்துள்ளேன். மேலும் நாளை (வெள்ளிக்கிழமை) தேசிய தினம் கொண்டாட உள்ள நேபாள மக்களுக்கும் பிரதமருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தேன்” என பதிவிட்டுள்ளார்.