இந்தியா

டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் அறைகளில் சோதனை

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற அறைகள் மற்றும் நீதிபதிகளின் அறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, பல நீதிபதிகள் தங்கள் விசாரணை நடவடிக்கைகளை காரணம் கூறாமல் ஒத்திவைத்தனர், நீதிமன்ற அறைகள் காலி செய்யப்பட்டன. மேலும், பல அமர்வுகள் உடனடியாக தங்கள் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்தின.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை 8.38 மணியளவில், நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு நடக்கும் என்று ஒரு மின்னஞ்சல் வந்தது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஒரு வெடிகுண்டு செயலிழப்பு படை வாகனம் ஆகியவை நீதிமன்ற வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ளன.

நீதிபதிகள் அறைகள் மற்றும் நீதிமன்ற அறைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறிய வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், வளாகத்தில் உள்ள புல்வெளிகளில் அமர்ந்திருந்தனர்.

SCROLL FOR NEXT