இந்தியா

சிக்கிமில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம்

வெற்றி மயிலோன்

கேங்டாக்: சிக்கிமில் உள்ள மேல் ரிம்பி பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

மேற்கு சிக்கிம் மாவட்டத்தின் யாங்தாங் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது சேறும், பாறைகளும் அவர்களின் வீட்டைத் தாக்கின. அவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், நான்காவது நபர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார்.

ஹியூம் நதியின் மீது தற்காலிக மரப் பாலம் அமைத்து காயமடைந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஷெரிங் ஷெர்பா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிகிச்சையின் போது ஒரு பெண் உயிரிழந்தார், மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மூன்று பேரை இன்னும் காணவில்லை. கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் பாதகமான வானிலை காரணமாக மீட்புப் பணி கடினமாகியுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT