இந்தியா

ஜப்பான், சீனாவுக்கு பிரதமர் மோடி பயணம்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஆக.31-ல் சந்திக்கிறார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜப்பான், சீனாவில் பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக அவர் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டார். அங்கிருந்து சீனா செல்லும் அவர் ஆகஸ்ட் 31-ம் தேதி அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 15-வது இந்திய, ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு ஆகஸ்ட் 29, 30-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து டோக்கியோவுக்கு புறப்பட்டார். இந்த மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை, அவர் சந்திக்கிறார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

டோக்கியாவில் இருந்து ஆகஸ்ட் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்கு செல்கிறார். அங்கு ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் (எஸ்சிஓ) அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இந்தோனேசியா அதிபர் பிரபோவா, சுபியாண்டோ, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

7 ஆண்டுக்கு பிறகு சீனா பயணம்: கடந்த 2018 ஜூனில் சீனாவின் குயிங்தவோ நகரில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். கடந்த 2019-ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா வீரர்கள் இடையேஏற்பட்ட மோதல் காரணமாக சீனாவுக்குசெல்வதை பிரதமர் மோடி முழுமையாக புறக்கணித்தார். இந்த சூழலில் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க அவர் சீனாவுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT