அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம் 
இந்தியா

“பொய் வழக்கு பதியும் அமைச்சருக்கு எத்தனை ஆண்டு சிறை?” - அமித் ஷாவுக்கு கேஜ்ரிவால் கேள்வி

ஆனந்த்

புதுடெல்லி: “ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டால், அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த அமைச்சருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்?” என்று அமித் ஷாவுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சிறிய குற்றங்களுக்கு இந்த மசோதா பொருந்தாது. ஐந்து வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஒரு வழக்கில் ஒருவர் சிறைக்குச் சென்று 30 நாட்களில் ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், அவர் பதவியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அல்லது ஐந்து வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற அமைச்சரோ, முதல்வரோ, பிரதமரோ சிறையில் இருந்து கொண்டே அரசாங்கத்தை நடத்துவது எந்த அளவுக்கு நியாயம்?" என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், "கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டு, அவர்களின் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து, அவர்களை அமைச்சராகவோ, துணை முதல்வராகவோ அல்லது முதல்வராகவோ ஆக்கினால், அத்தகைய அமைச்சரோ, பிரதமரோ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா? அத்தகைய நபருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும்?

ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டால், அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த அமைச்சருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், சிறையில் இருந்தபடித்தான் அரசாங்கத்தை நடத்தினாலும் அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவும் கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், "அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக என்னை பொய் வழக்கில் சிக்க வைத்து மத்திய அரசு என்னை சிறைக்கு அனுப்பியபோது, ​​நான் 160 நாட்கள் சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்தினேன்.

டெல்லியில் கடந்த 7 மாதங்களாக ஆட்சியில் உள்ள பாஜக அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, அந்த சிறை அரசாங்கத்தின் சிறப்பான செயல்பாடுகள் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. சிறை அரசாங்கத்தின் போது, டெல்லியில் ​​மின்வெட்டு இல்லை, தண்ணீர் தட்டுப்பாடு இல்லை, மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் கிடைத்தன, இலவச பரிசோதனைகள் நடத்தப்பட்டன, தற்போது ஒரே ஒரு மழையில் டெல்லி இவ்வளவு மோசமான நிலையில் இருப்பதுபோல் அப்போது இல்லை, தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட அனுமதிக்கப்படவில்லை..." என்று தெரிவித்துள்ளார்.

பதவி பறிப்பு மசோதா தொடர்பாக கடந்த 22ம் தேதி பிஹாரின் கயா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "அரசு துறை​களில் பணி​யாற்​றும் பியூன், ஓட்​டுநர், எழுத்​தர் போன்ற பணி​யாளர்​கள் 50 மணி நேரம் சிறை​யில் இருந்​தால், அவர் வேலையை இழக்க நேரிடு​கிறது. ஆனால், ஒரு முதல்​வரோ, அமைச்​சரோ, பிரதமரோ சிறை​யில் இருந்​தா​லும் அரசு பணி​யில் தொடர்​கிறார். சிறை​யில் இருந்தே கோப்​பு​கள் கையெழுத்​திட்ட அவலத்தை பார்த்​தோம்.

அரசி​யல் கட்சி தலை​வர்​கள் இது​போன்ற மனநிலை​யில் இருந்​தால், நாம் எப்​படி ஊழலுக்கு எதி​ராக போராட முடி​யும். ஊழலை ஒழிக்க தே.ஜ கூட்​டணி அரசு சட்​டம் கொண்டு வரு​கிறது. இதன் வரம்​புக்​குள் பிரதமரும் வரு​கிறார். ஆனால், காங்​கிரஸ், ராஷ்ட்​ரிய ஜனதா தளம் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இந்த புதிய சட்​டத்தை எதிர்க்​கின்​றன. சிறை​யில் இருப்​பவர், அரசி​யல் சாசன பதவி​களில் எல்​லாம் தொடர முடி​யும் என பாபு ராஜேந்​திர பிரசாத் போன்ற நம் முன்​னோர்​கள் கற்​பனை செய்து கூட பார்த்​திருக்க மாட்​டார்​கள்" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT