ஷாஜகான்பூர்: பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று முன்தினம் பிஹார் வந்தார். முன்னதாக ஆர்ஜேடி சமூக ஊடக தளத்தில், “இன்று பிஹாரின் கயாவுக்கு வாக்குத் திருடன் வருகிறார். பிஹாரிகளுக்கு முன்னால் பொய்களை சொல்வார்’’ என்று கூறப்பட்டு இருந்ததாக உ.பி.யின் ஷாஜகான்பூர் காவல் நிலையில் நகர பாஜக தலைவர் ஷில்பி குப்தா புகார் அளித்தார்.
அவர் தனது புகாரில், “பிரதமருக்கு எதிரான தேஜஸ்வியின் அவதூறான கருத்து நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக நகரின் சதார் பஜார் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டத்தின் 353(2) பிரிவு (வதந்திகளை பரப்புதல்), 197(1)ஏ பிரிவு (படம் மூலம் குற்றம் சுமத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பளர் ராஜேஷ் துவிவேதி நேற்று தெரிவித்தார்.
இதுபோல் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ மிலிந்த் நரோட்டி அளித்த புகாரின் பேரில் தேஜஸ்வி மீது பிஎன்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் நேற்று கூறும்போது, “இதற்கு நான் பயப்பட மாட்டேன். தொடர்ந்து உண்மையை பேசுவேன். அவர்கள் என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும்’’ என்றார்.