அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள மார்ஷல் மானேக்ஷா பரேட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:
கடந்த 2011-ம் ஆண்டு கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஆட்சிப் பணி தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதனால் தேர்ச்சிபெற்ற 362 பேரின் பணி நியமன ஆணையை நிறுத்தி வைக்க அமைச்சரவை முடிவெடுத்தது. இது எங்களுடைய தனிப்பட்ட விருப்பம் அல்ல. மக்களின் விருப்பமும் அதுதான்.
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்காமல் இப்போது பிரச்சினையை கிளப்பி விடுகின்றன. ஒரு சில அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 362 பேரை சந்தித்து, அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டி விடுகின்றனர்.
என் மீதும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்படும். ஆதலால் எக்காரணம் கொண்டும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது.