இந்தியா

கேமிங் செயலிகள் மூலம் தகவல் பரிமாற்றம்? - தீவிரவாதிகளின் ரகசிய நடவடிக்கை

வேட்டையன்

ஸ்ரீநகர்: பப்ஜி மாதிரியான ஆன்லைன் வார் கேமிங் செயலிகள் மூலம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கேமிங் செயலிகள் தான் இப்போது தீவிரவாதிகளுக்கு தகவல் தொடர்பு சார்ந்து முக்கியமானதாக அமைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் ரகசியமாக நடவடிக்கைகளில் தீவிரவாதிகள் செயல்படுவது தெரியவந்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாத குழுக்கள் தகவல் தொடர்புக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வழக்கமான வழிகளைத் தவிர்த்து, பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து தப்பிக்கும் நோக்கில் ஆன்லைன் கேமிங்கில் உள்ள லைவ் சாட் அம்சத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இந்த வகையில் சுமார் நான்கு வழக்குகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒரு வழக்கில் எல்லைக்கு அப்பால் உள்ள கேமிங் பார்ட்னர் இடமிருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறுவன் ஒருவர் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளார். அந்த சிறுவனை தீவிரவாதம் நோக்கி ஈர்க்கும் வகையில் அவருடன் சாட் செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முறையான ஆலோசனை மற்றும் அறிவுரைகளை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

தீவிரவாத குழுக்கள் பல்வேறு வகையில் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வது குறித்து இதற்கு முன்பு நாம் அறிந்திருப்போம். இந்நிலையில், ஆன்லைன் கேமிங் செயலிகளில் உள்ள லைவ் சாட் அம்சம் மூலம் தொடர்பு கொள்வது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

SCROLL FOR NEXT