இந்தியா

நிமிஷா பிரியாவை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - இந்திய வெளியுறவு அமைச்சகம் விவரிப்பு

அனலி

புதுடெல்லி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியா விவகாரத்தில் தீர்வு காண சில நட்பு நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “இது மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரம். இந்திய அரசாங்கம் இந்த விவகாரத்தில் முடிந்த அளவுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. நிமிஷா குடும்பத்தினருக்கு சட்ட உதவிகளை செய்துள்ளது. அவர்கள் குடும்பத்துக்கு உதவுவதற்காக பிரத்யேகமாக ஒரு வழக்கறிஞரையும் நியமித்துள்ளோம்.

ஏமனின் உள்ளூர்வாசிகள் மூலம் தீர்வு காணவும் முயற்சித்து வருகிறோம். நிமிஷாவின் குடும்பத்தினர், மெஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் இந்த உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம். இருதரப்பும் பொதுவான ஒரு முடிவுக்கு வருவதற்கான சூழலை உருவாக்கும் வகையில், சில நட்பு நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறோம். இதற்கிடையில்தான் ஏமன் அரசு மரண தண்டனையை தற்காலிகமாக தள்ளிவைத்தது” என்றார்.

அப்போது அவரிடம், கேரளாவைச் சேர்ந்த முஸ்​லிம் மத தலை​வர் கிராண்ட் முப்தி ஏ.பி. அபுபக்​கர் முஸ்​லி​யார், ஏமனை சேர்ந்த முஸ்​லிம் மதத் தலை​வர்​களு​டன் தொலைபேசி​யில் பேசி​யதால்தான் தண்டனை தள்ளிவைகப்பட்டதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஜெய்ஸ்வால், “அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது” என்றார்.

சேவ் நிமிஷா பிரியா கவுன்சிலின் வேண்டுகோள்: நிமிஷா பிரியாவை மீட்டெடுக்க சேவ் நிமிஷா பிரியா கவுன்சில் என்ற குழு செயல்பட்டு வருகிறது. நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, ஏமனில் உள்ள இந்தியரான சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் உள்ளிட்டோர் இதனை இயக்குகின்றனர். இந்தக் குழுவின் மூலமாகவே நிமிஷாவை மீட்பதற்கான குருதிப் பணத்தையும் திரட்டியுள்ளனர்.

இந்நிலையில், இந்தக் குழுவானது இன்று (வியாழக்கிழமை) ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நிமிஷா பிரியா விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்குமாறு கோரியுள்ளது. “நிமிஷா விவகாரத்தில் செய்தி ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரேட்டிங்குக்காக தகவல்களைப் பரப்புவதை நிறுத்த வேண்டும். இது நிமிஷாவை மீட்டெடுப்பதில் சிக்கலை உண்டாக்கும்.

ஏமன் நாட்டு அறிஞர் ஷேக் உமர் ஹபீப் மெஹ்தி குடும்பத்தினருடனான பேச்சுவார்த்தைக்கு உதவி வருகிறார். இந்தச் சூழலில் அவரைப் பற்றியும், மெஹ்தி குடும்பத்தினரைப் பற்றியும் சில அவதூறு செய்திகள் பரவிவருகின்றன. இதுபோன்ற செய்திகள் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கலை உண்டாக்குகிறது. மெஹ்தி குடும்பத்தின் மூத்தவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை இளையோர் தடுக்க இத்தகைய செய்திகளே காரணமாகிவிடுகிறது. எனவே, அனைவரும் அமைதி காக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்​தோ மெஹ்​தியை கொலை செய்த குற்​றத்​துக்​காக கேரள நர்ஸ் நிமிஷா பிரி​யா​வுக்கு மரண தண்​டனை விதிக்​கப்​பட்டு நேற்று (ஜூலை 16) அது நிறைவேற்​றப்பட இருந்​தது. இந்த நிலை​யில், நீண்​ட​கால​மாக நடை​பெற்ற பலமுனை பேச்​சு​வார்த்​தைக்கு பிறகு நிமிஷா​வின் மரண தண்​டனை அடுத்த உத்​தரவு வரும் வரை தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்தச் சூழலில், தன் சகோதரரை கொலை செய்த கேரள செவிலியர் நிமிஷா​வின் குற்​றத்​துக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது என அப்​தெல்ஃபத்தா மெஹ்தி திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகை​யில், “இந்​திய ஊடகங்​கள் குற்​ற​வாளி நிமிஷாவை பாதிக்​கப்​பட்​ட​வ​ராக சித்தரிக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றன. இது எங்​களது குடும்பத்தினரிடம் ஆழ்ந்த அதிருப்​தியை ஏற்​படுத்​தியுள்​ளது. எனது சகோதரர் தலால் அப்​தோ மெஹ்​தியை கொலை செய்த குற்​றத்​துக்​காகவே நிமிஷா பிரி​யா​வுக்கு இந்த தண்டனை வழங்​கப்​பட்​டுள்​ளது. எனவே, அவருக்கு மரண தண்​டனையை நிச்​ச​யம் நிறைவேற்ற வேண்​டும். இந்த குற்​றத்​துக்கு அவருக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது” என்​று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT