புதுடெல்லி: ‘இறக்குமதி செய்யப்படும் ட்ரோன்களை உள்நாட்டில் தயாரித்தல்’ என்ற ஒரு நாள் பயிலரங்கு டெல்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நேற்று நடைபெற்றது. பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்த பயிலரங்கில் ராணுவ உயர் அதிகாரிகள், பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகள், நிபுணர்கள், ராணுவத் தளவாட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டு பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ட்ரோன்களையும், அதில் எடுத்துச் செல்லப்படும் குண்டுகளையும் பயன்படுத்தியது. ஆனால், பெரும்பாலானவற்றை நடுவானில் அழித்துவிட்டோம்.
நமது தேவைகளுக்கு ஏற்ப உள்நாட்டில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள், வானில் இடைமறிக்கும் ட்ரோன்கள் ஆகியவை மிக முக்கியம் என்பதை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியது. பாதுகாப்பு துறையில் புதிய தொழில்நுட்பங்கள் முக்கியமானது.. இவற்றுக்காக நாம் வெளிநாடுகளைச் சார்ந்திருக்க முடியாது. இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.