இந்தியா

ஆண்கள் நலனுக்கு தனி அமைச்சகம் தேவை: ஆண் உரிமை இயக்கங்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஆண்களின் நலனைப் பாதுகாக்க தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆண் உரிமைகள் நல இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்ராவில் ஆண்கள் உரிமைக்கான 100-க்கும் மேற்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தோரின் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில், ஆண்கள் நலனுக்கென தனி அமைச்சகத்தை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். ஆண்கள் நல ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும். பெண்களிடமிருந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தாக்குதலுக்குள்ளாகும் ஆண்களை பாதுகாக்க சட்டமியற்ற வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பங்கேற்ற குடும்பத்தை காப்பாற்றுவோம் இயக்கத்தைச் சேர்ந்த குமார் ஜாகிர்தார் கூறும்போது, “ஆண்களுக்கு எதிரான அரசின் பாரபட்சமான அணுகுமுறை மாற வேண்டியதன் அவசியம் குறித்து இக்கூட்டத்தில் விவாதித்தோம். பெண்களுக்கு உரிமை அளிக்கிறோம் என்ற பெயரில், ஆண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

எங்களின் பிரதிநிதிகள் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து, ஆண்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்” என்றார்.

மாநாட்டுக்கான செய்தித் தொடர்பாளர் பர்கா திரெஹான் கூறும்போது, “இது நாங்கள் நடத்தும் 6-வது மாநாடாகும். அடுத்த மாநாட்டை மும்பையில் நடத்தவுள்ளோம். நாடு முழுவதும் ஆண்கள் உரிமைக்கான இயக்கங்களில் 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இப்போதுள்ள சட்டங்கள் அனைத்தும் பாரபட்சமாக உள்ளன. பெண்களுக்கு ஆதரவான அந்த சட்டங்களை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். குடும்ப அமைப்புகளையே சிதைக்கும் வகையில் இந்த சட்டங்கள் உள்ளன. 80 முதல் 90 வயதுடையவர்கள் கூட கைது செய்யப்படுகிறார்கள். இந்த வழக்குகளில் 80 சதவீதம் தவறான குற்றச்சாட்டுகளின் பேரில் பதிவு செய்யப்படுகின்றன” என்றார்.

SCROLL FOR NEXT