ராஜா ரகுவன்சி 
இந்தியா

ராஜா ரகுவன்சி கொலை வழக்கில் ம.பி.யில் மேலும் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

இந்தூர்: ராஜா ரகுவன்சி கொலை வழக்கில் மேலும் 2 பேரை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரும் அவரது மனைவி சோனமும் தேனிலவுக்கு மேகாலயா மாநிலத்துக்குச் சென்றனர்.

அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்சியை கொன்றது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சோனம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சோனமின் காதலர் ராஜ் குஷ்வாஹாவுக்குச் சொந்த லேப்டாப், நகைகள், ஆயுதங்களை ஒரு பெட்டியில் வைத்து மறைத்து வைக்குமாறு சோனம் ரகுவன்சி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் சிலோம் ஜேம்ஸ் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக்கு குழு (எஸ்ஐடி) போலீஸார், சிலோம் ஜேம்ஸை கைது செய்தனர். மேலும், மேகாலயா செல்வதற்கு முன்பு சோனம் தங்கியிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் காவலர் பல்வீர் அஹிர்வார் என்பவரையும் எஸ்ஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT