ஈரானில் இருந்து தாயகம் அழைத்துவரப்பட்ட இந்தியர்கள் 
இந்தியா

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை குடிமக்களையும் வெளியேற்ற இந்தியா முடிவு

சாந்தகுமார்

புதுடெல்லி: நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் அந்நாடுகளின் குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், ஈரானில் உள்ள வெளிநாட்டவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி வருகிறார்கள்.

ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்கள் ஈரானில் இருந்து ஒரு தனி விமானம் மூலம் நேற்று (ஜூன் 20) புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்தில் இருந்து இன்று (ஜூன் 21) அதிகாலை 3 மணிக்கு சிறப்பு விமானம் இந்தியர்கள் புதுடெல்லி அழைத்துவரப்பட்டனர். இதன் மூலம், இதுவரை 517 இந்தியர்கள் ஆபரேஷன் சிந்து மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், ஈரானில் உள்ள நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்களை வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில், ஈரானில் உள்ள இந்திய தூதரகம், அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களையும் வெளியேற்ற முயற்சிகளை மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரானில் உள்ள நேபாளம் மற்றம் இலங்கை நாட்டவர்கள் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்து, தொலைபேசி எண்களையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT