இந்தியா

அகமதாபாத் விமான விபத்து: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல்

வேட்டையன்

லாகூர்: அகமதாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு இன்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

“அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

நடந்தது என்ன? - விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 787-8 ரக விமானத்தில் மொத்தம் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 600+ அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, வெடித்து விபத்தில் சிக்கியது. விமானம் விழுந்த இடம் பி.ஜி மருத்துவக் கல்லூரி வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அங்கிருந்த மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூப்வானி உட்பட சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதை குஜராத் மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமான விபத்து தேசத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்குவதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT