பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே விபத்து நேர்ந்த பகுதி 
இந்தியா

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: ஜூன் 12-க்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சாந்தகுமார்

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டி.என்.ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் வழக்குகளை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான அடுத்த விசாரணையை கர்நாடக உயர் நீதிமன்றம் ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த மனு தொடர்பாக அட்வகேட் ஜெனரல், சீலிட்ட உறையில் பதில் மனுவை தாக்கல் செய்வார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 3-ம் தேதி குஜராத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்​கெட் தொடரின் இறுதி போட்​டி​யில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்​சிபி ) அணி வெற்றி பெற்றதை அடுத்து, மறுநாள் பெங்​களூரு விதானசவுதா வளாகத்​தி​லும், சின்ன​சாமி கிரிக்​கெட் ஸ்டேடி​யத்​தி​லும் வெற்றி விழா நடை​பெற்​றது. சின்​ன​சாமி ஸ்டேடி​யத்​தில் ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தின் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் காமாட்சி உட்பட 11 ரசிகர்கள் உயிரிழந்​தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டி.என்.ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில், தங்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த மனு தொடர்பாக அட்வகேட் ஜெனரல், சீலிட்ட உறையில் பதில் மனுவை தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) உரிமையாளரான ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (ஆர்.சி.எஸ்.எல்), இந்த வழக்கில் தங்கள் நிறுவனம் தவறாக சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டது. அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், "வரையறுக்கப்பட்ட பாஸ்கள் மட்டுமே இருப்பதாக சமூக ஊடகங்களில் ஆர்.சி.எஸ்.எல் தெளிவாகத் தெரிவித்தது. இலவச பாஸ்களுக்குக் கூட, நுழைவுக்கு முன் பதிவு கட்டாயம் என்றும் கூறினோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த தனி மனுவில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை தவறியதே நெரிசலுக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT