இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது - பின்னணி என்ன?

செய்திப்பிரிவு

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்தில் உதவி நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஷாகுர் கான். இவரை அண்மையில் போலீஸார் கைது செய்தனர். இவர், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து வந்ததாகத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக நீண்ட நாட்களாக அவரைக் கண்காணித்து வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இஸ்லாமாபாத்துடன் தொடர்புடைய தொலைபேசி எண்கள் ஷாகுர் கானின் மொபைல் போனில் இருந்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஷாகுர் கான் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, முன்னாள் அமைச்சர் சாலே முகம்மதுவுக்கு தனிச்செயலாளராக கான் இருந்துள்ளார். முகம்மதுவும், கானும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்

கடந்த சில ஆண்டுகளில் அவர் 6 அல்லது 7 முறை இஸ்லாமாபாத் சென்று வந்துள்ளதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அவரது செல்போனில் இருந்து பல பதிவுகள் அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கானின் வங்கிக்கணக்கை முடக்கி விசாரித்து வருகிறோம். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளது. இந்திய ராணுவம் தொடர்பான பல தகவல்களை அவர் பாகிஸ்தானுக்குக் கொடுத்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் தூதகரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அஹ்சான் உர் ரஹிம், டேனிஷ், சோஹலை கமார் உள்ளிட்டோருடன் அவருக்குத் தொடர்பு உள்ளது. இதில் டேனிஷ் என்ற அதிகாரியை, அண்மையில் டெல்லியிலிருந்து மத்திய அரசு வெளியேற்றியது. ஷாகுர் கானிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

SCROLL FOR NEXT