இந்தியா

கொல்கத்தா இஸ்கான் கோயிலின் ஜெகந்நாதர் ரதத்தில் சுகோய் போர் விமான சக்கரம்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தா இஸ்கான் கோயிலில் வலம் வர உள்ள ஜெகந்நாதர் ரதத்தில் சுகோய் ரக போர் விமானத்தின் சக்கரம் பொருத்தப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயிலில் வரும் 27-ம் தேதி வருடாந்திர ரத யாத்திரை நடைபெற உள்ளது.

இதில் வலம் வரவுள்ள ஜெகந்நாதர் ரதத்தில் ரஷ்யாவின் சுகோய் ரக போர் விமானத்தின் சக்கரங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சக்கரங்கள் விமானம் புறப்படும்போது மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சுற்றும் திறன் வாய்ந்தவை ஆகும். ஆனால் ரதம் மணிக்கு 1.4 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.

இதுகுறித்து இஸ்கான் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ் கூறும்போது, “கடந்த 48 ஆண்டுகளாக போயிங் பி-747 ரக விமானத்தின் சக்கரங்கள் மூலம்தான் இந்த ரதம் இயங்கி வந்தது. கடந்த சுமார் 15 ஆண்டுகளாகவே இந்த சக்கரங்களை மாற்ற திட்டமிட்டு வந்தோம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ரத யாத்திரையின்போது சில பிரச்சினைகள் எழுந்தன. அதேநேரம், போயிங் ரக விமான சக்கரங்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இதையடுத்து, சுகோய் ரக போர் விமான சக்கரங்கள் போயிங் சக்கரங்களுடன் ஒத்துப் போவதாக இருந்தது. எனவே அதை பொருத்த முடிவு செய்தோம்.2 வாரத்தில் சக்கரங்கள் பொருத்தும் பணி நிறைவடையும்” என்றார்.

SCROLL FOR NEXT